தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் விளக்கும் அளிக்கும் வகையில் சர்வதேச சமூகம் செயற்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-யுத்தம் நடைபெற்ற பொழுது தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவதற்கு தயாராக இருந்தவர்கள் யுத்தம் முடிந்த பிறகு எதனையுமே கொடுக்கக்கூடாது என்ற நிலைக்கு வருவதாக இருந்தால், அவ்வாறானவர்களுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை.
பெரும்பான்மை அரசியல் தலைமைகளிடையே உள்ள முரண்பாடான நிலைமைகளை சர்வதேச சமூகம்
புரிந்துகொள்ள வேண்டும்.அத்துடன் வடக்குக்கு பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்களைக்
கொடுத்தால் நாடே பிளவுபடும் எனும் பிழையான இனவாத கருத்துகள் மீண்டும் மீண்டும் திணிக்கப்படுகின்றன.நாட்டில் நிரந்தரமான ஒரு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்-என்றார்.