ரணில் விக்ரமசிங்க என்பவர் அனைத்தையும் தவிடுபொடியாக்கி ஆட்சி செய்யும் மோசமான மனநிலையை கொண்ட ஆட்சியாளர்.
நாட்டின் ஆட்சியாளர்கள் நாட்டை அதளபாதாளத்திற்குள் கொண்டு செல்கின்றனர் எனவும் நாட்டு மக்களுக்கு இதே விதத்தில் தொடர்ந்தும் வாழ முடியாது என்பதால், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மொறட்டுவை தொகுதி அதிகார சபைக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியாளர்களின் அணிகள் கையாண்டு வந்த பொருளாதாரம் மற்றும் அரசியல் கொள்கைகள் தற்போது முடிவை நோக்கி பயணிக்கின்றது.
ரணில் விக்ரமசிங்கவே ஆளும் வர்க்கத்தின் இறுதியான துடுப்பாட்ட வீரர். தேர்தல்,நீதித்துறை,பாராளுமன்றம் என்பன மக்களுக்கும், ஆட்சியாளருக்கும் இடையிலான இணக்கம் ஆகும்.
ரணில் விக்ரமசிங்க என்ற ஆட்சியாளர் இவை எதனையும் கவனத்தில் கொள்ளாத தலைவர்.
சகல ஜனநாயக கூட்டமைப்புகளையும் வீழ்த்தியுள்ளார். ரணில் விக்ரமசிங்க என்பவர் அனைத்தையும் தவிடுபொடியாக்கி ஆட்சி செய்யும் மோசமான மனநிலையை கொண்ட ஆட்சியாளர்.
இப்படியான ஆட்சியாளரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். நாங்கள் இதற்கு முன்னர் அரசாங்கங்களையும் ஆட்சியாளர்களையும் விரட்டியடித்துள்ளோம்.
எனினும் யாரை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை சிந்திக்கவில்லை. ஆட்சியில் இருப்பவர்களை விரட்டுவது மாத்திரம் நமது பணியல்ல. யாரை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை தெரிவு செய்வதே எமக்கான சவால்.
அடுத்து நடைபெறும் எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் வெற்றி பெற வேண்டும். தேசிய மக்கள் சக்தியே நாட்டை கட்டியெழுப்பி, நாட்டில் மாற்றங்களை உருவாக்கும்.
இலங்கை வரலாற்றில் பல தேர்தல் போட்டிகளை பார்த்திருக்கின்றோம். இரண்டாக பிளவுப்பட்டு சண்டையிட்டு கொள்வார்கள். பின்னர் இரண்டாக பிரிந்து கைகளை தட்டுவார்கள்.
ஒரு அணி ஆட்சிக்கு வரும். எனினும் இரண்டு அணிகளும் ஒன்று. உண்மையில் இவர்களிடம் உண்மையான போட்டி இருக்கவில்லை.
சிறிய வயதில் சிறுவர்கள் திருடன்-பொலிஸ் விளையாட்டை விளையாடுவது போல், பொய்யான இரண்டு அணிகளாக பிரிந்து செயற்படுகின்றனர். ஆட்சி அதிகாரத்தை இரண்டு அணிகளுக்குள் மாற்றிக்கொள்ளும் போட்டி மாத்திரமே இருந்தது.
நாட்டை அழித்த, மக்களை வறுமைக்குள் தள்ளிய அழிவான ஆளும் வர்க்கத்திற்கு எதிராக பொது மக்களின் அமைப்பான தேசிய மக்கள் சக்தி இம்முறை போட்டியில் இறங்கியுள்ளது.
இது இலகுவான போட்டியல்ல. இரண்டு அணிகளை சேர்ந்தவர்கள் தமது அதிகாரத்தை பாதுகாப்பதற்காக செய்ய முடிந்த அனைத்தையும் செய்வார்கள் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.