நாட்டில் அதிகரித்துவரும் இணையவழி குற்றங்கள், வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பில் நேற்று (23.08.2023) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு ஊர்வலம் கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகி காந்தி பூங்காவில் நிறைவு பெற்றது. மேலும் மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடமான காந்திப்பூங்கா வளாகத்தில் இணையவழிக் குற்றங்களைத் தடுக்கும் விபரங்கள் அடங்கிய பதாகையும் நிறுவப்பட்டது.
தற்போது நாட்டில் மிகவும் அதிகரித்து வரும் இணைய வழி வன்முறை தொடர்பாக இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வுகளும் அருவி பெண்கள் வலையமைப்பினால் நடாத்தப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் முதல் கட்டமாக 60 இளைஞர்களுக்கான இணைய பாதுகாப்பு பயிற்சி நெறி (cyber security TOT trainig) வழங்கப்பட்டுள்ளதுடன் இணைய வழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பாகவும் விழிப்புணர்வாகவும் இருப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் இம்மாபெரும் வீதியோர விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டது.
இவ்வூர்வலத்தில் அதிகளவான இளைஞர் யுவதிகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், இணையவழிக் குற்றங்களைத் தடுக்கும் வாசகங்கள் கொண்ட விழிப்புணர்வு பதாகைகள், விழிப்புணர்வு சமிக்ஞைகள், விழிப்புணர்வு காட்சிப்படுத்தப்பட்ட ஊர்தி என்பன இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.