இலங்கையில் இனக் கலவரம் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் குறித்து இந்திய உளவுப் பிரிவினால், தமக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் இனக் கலவரமொன்று ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளமை தொடர்பாக வெளியான செய்திகளுக்கு பதில் அளித்த போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இன்று காலை எதிர்கட்சித் தலைவரும் சில சமூக வலைத்தள ஊடகங்களிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக வெளிநாட்டு உளவுப் பிரிவினால் இலங்கையில் மீண்டும் இனவாத கலவரம் உருவாக்க கூடிய நிலைமை உள்ளதாக தெரிவித்து செய்திகள் சில வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவரும் இன்று காலை கேள்வி எழுப்பினார். நான் முதலில் ஒன்றைக் கூற வேண்டும், எமக்கு எந்தவொரு உளவுப் பிரிவினாலோ அமைப்பினாலோ நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் இனவாத கலவரம் தொடர்பாகவும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
இதனை நான் மிகவும் பொறுப்புடக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.அதேபோன்று வெவ்வேறு வதந்திகள், பேஸ்புக் ஊடாக வெளியாகும் தகவல்களுக்கு எப்போதும் எம்மால்பதிலளித்துக்கொண்டிருக்கவும் முடியாது.
எமது உளவுத்துறையானது, சில இடங்களில் சில குழுக்கள், அரசியல் தூண்டுதல் காரணமாக இந்த நாட்டில் இனவாத கலவரம், பிரச்சினைகளை உருவாக்க பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர் என்பதை அவதானிக்க முடிக்கின்றது.
அந்தக் குழுக்கள் தொடர்பாக பாதுகாப்பு பிரிவும் அரசும் கவனம் செலுத்தியுள்ளன என்பதை நான் விசேடமாக நினைவூட்ட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.