செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்சைட் லேண்டரை அனுப்பியது. இந்த லேண்டர் கடந்த 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து ஆய்வை தொடங்கியது. எரிசக்தி தீர்ந்ததால் இந்த திட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்சைட் லேண்டர் சேகரித்து அனுப்பிய தரவுகளை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது தெரிய வந்தது. இந்த பகுப்பாய்வில் வேகமாக சுழல்வதன் காரணமாக செவ்வாய் கிரகத்தில் ஒரு நாளின் நீளம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லி விநாடி அளவு குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
சுழற்சி வேகம் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. அதே வேளையில் செவ்வாய் கிரகத்தின் நிறை, அதன் மேற்பரப்பில் நடக்கும் நிகழ்வு உள்ளிட்ட கிரகத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வரும் மாற்றம் ஆகியவை சுழற்சி வேகம் அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
பனிக்கட்டிகள் நிறைந்த துருவப்பகுதிகளில் பனிக்கட்டி படிவதாலும், பனிக்கட்டி புதைவால் நிலப்பரப்பு உயர்ந்து வருவதாலும் இது நிகழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக இன்சைட்டின் முதன்மை ஆய்வாளர் புரூஸ்பெனர்ட் கூறும்போது, மிகவும் துல்லியத்துடன் சமீபத்தில் அளவீட்டை பெறுவது மிகவும் அருமையாக உள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கான இன்சைட் போன்ற புவி இயற்பியல் நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போதைய ஆய்வு முடிவுகள் பல ஆண்டுகளின் உழைப்பை பயனுள்ளதாக்குகின்றன என்றார்.