சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற ஹஜ்; பேசா (Free Moment Pass) விசா பங்கீட்டில் அரசியல் தலையீடுகள் உள்ளமை தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.
ஹஜ் யாத்திரீகர்களின் நலன்களை கவனிப்பதற்காக சவூதி அரேபியாவினால் இலவசமாக வழங்கப்படுகின்ற ஹஜ் பேசாக்களை பங்கீடு செய்வதில் அரசியல்வாதிகளின் சிபாரிசுகள் மற்றும் தலையீடுகள் இடம்பெறுவதை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவல்கள் மூலம் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.
சவூதி அரேபியாவினால் கடந்த வருடம் இலங்கைக்கு வழங்கப்பட்ட 68 பேசா விசாக்களில் 11 பேசாக்கள் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரின் சிபாரிசில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 1,585 ஹஜ் கோட்டாக்களும் 68 பேசாக்களும் இலங்கைக்கு வழங்கப்பட்டது. எனினும், பொருளாதார நெருக்கடி காரணமாக 968 பேர் மாத்திரமே ஹஜ் கடமையினை நிறைவேற்றினர். எனினும், இலவசமாக கிடைக்கப் பெற்ற பேசாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட 68 பேரும் ஹஜ் கடமையினை நிறைவேற்றியுள்ளனர்.
இதில் 57 பேசாக்கள் ஹஜ் முகவர்களுக்கும், ஏனைய 11 பேசாக்களும் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சரினால் சிபாரிசு செய்யப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்;டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமத், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் ஆகியோர் கடந்த வருட ஹஜ் தூதுக்குழுவில் இடம்பிடித்திருந்தனர்.
இவர்கள் மூவரும் பேசா விசாவிலேயே ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்றுள்ளனர். இதற்கு மேலதிகமாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமதின் மனைவி, பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீலின் மகன் முஹம்மது மர்ஜான் அஸ்மி முஹம்மது இஷாக் மற்றும் மருமகள் (மகனின் மனைவி) ஆகிய மூவரும் பேசா விசாவிலேயே ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்றுள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜனான் பழீலின் மனைவிக்கு வழங்கப்பட்ட பேசாவில் விசாவில் முஹம்மது நுஃமான் முஹம்மது சமீல் என்பவர் ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்றுள்ளதாகவும் திணைக்களம் வழங்கிய தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் பிரதமரின் சிபாரிசின் அடிப்படையில் எம்.எம்.எஸ். முஜீபுர் என்பவருக்கும் பேசா விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான ஹஜ் குழுவின் உறுப்பினரான சட்டத்தரணி நிப்ராஸ் நஸீர், கடந்த வருடம் பேசா விசாவில் ஹஜ்ஜிற்கு சென்றுள்ளார்.
இதற்கு மேலதிகமாக தொழிலதிபர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களது பெயர்களும் பேசா விசா வழங்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மேலும், இலங்கை ஹஜ் யாத்திரீகர்களின் நலன்களை கவனிப்பதற்காக உதவிப் பணிப்பாளரொருவர் உட்பட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மூவர் பேசா விசாவிலேயே சவூதி அரேபியா சென்றுள்ளனர்.
இந்த வருடம் இலங்கை ஹஜ் யாத்திரீகர்களின் நலன்களை கவனிப்பதற்காகச் சென்ற ஹஜ் குழுவின் உறுப்பினர்களுக்கும், திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கும் ஹஜ் நிதியத்திலிருந்து நிதி வழங்கப்பட்டது.
எனினும், கடந்த வருடம் சென்ற ஹஜ் குழுவின் உறுப்பினர்களுக்கோ, திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கோ எந்தவித நிதிக் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருடிக்கயினை காரணம் காட்டியே இந்நிதிக் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டது. இதனால் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மூவரும் சொந்த நிதியில் விமான டிக்கெட் மற்றும் தங்குமிடம் போன்றவற்றினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த வருடம் 49 பதிவுசெய்யப்பட்ட ஹஜ் முகவர்கள், 13 குழுக்களாக இணைந்து இலங்கையிலிருந்த யாத்திரீகர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால், ஹஜ் யாத்திரீகர்களுக்கு நல்ல வழிகாட்டுதல்களையும் வசதிகளையும் வழங்கும் நோக்கில் 57 பேசா விசாக்கள் 49 பதிவுசெய்யப்பட்ட ஹஜ் முகவர்களுக்கும் 8 ஹஜ் யாத்திரீகர்களுக்கு மேல் அழைத்துச் சென்ற அனைத்து முகவர்களுக்கும் ஒரு பேசா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டது.
அனைத்து ஹஜ் முகவர்களினதும் சம்மதத்துடன் நியாயமான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் இந்த இந்த பேசாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன எனவும் திணைக்களம் தெரிவித்தது.
தற்போதைய ஹஜ் குழுவின் தலைவரான இப்ராஹீம் அன்சாரே கடந்த வருடம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.