சர்வதேச மட்ட பிரமிட் மோசடியாளர்களான இரண்டு சீன பிரஜைகள் மற்றும் இரண்டு இலங்கையர்களையும் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பிரமிட் மோசடி மூலம் சுமார் 4 கோடி ரூபாவை சீன பிரஜைகள் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
7 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் பொரளையில் பெறப்பட்ட வீடொன்றில் வசித்து வந்த சீன பிரஜை ஒருவர் , தனது வீடு சிலரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடந்த 19ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
வேன், 7 மடிக்கணினிகள் மற்றும் 170 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என அவர் கூறியுள்ளார்.
இதன்படி, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில், பொலிஸார் தொலைபேசி தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து மூன்று இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிந்தனர்.
இதற்கமைய இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, அவர்களில் குறித்த சீன பிரஜையின் சாரதியும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
சீன நாட்டவர் 15 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் கொடுத்து கொள்ளையடிப்பது போல் நடிக்குமாறு கூறியதாக கைதான இலங்கையர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.
பின்னர் அந்த சீன பிரஜையும் அவரது மற்றொரு சீன நண்பரையும் பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொழும்பு துறைமுக நகரத்தில் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதாக கூறி மறைமுகமாக இவர்கள் இருவரும் நாட்டில் பாரியளவில் பிரமிட் மோசடியினை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் 4 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான பணத்தினை சூதாட்ட விளையாட்டுக்கு சென்று தோற்றுள்ள நிலையில், அதனை மறைப்பதற்காகவே இவ்வாறான போலியான கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்குரிய சீன பிரஜைகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பின்னர், பிரமிட் திட்டத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சீன பிரஜை வசித்து வந்த கொழும்பு குருந்துவத்தையில் உள்ள வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர்.
அதற்கு முன்பே அங்கிருந்த 15 சீன பிரஜைகள் சுமார் 40 மடிக்கணினிகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் சர்வதேச அளவிலான பிரமிட் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கொள்ளையிட்டதாக கூறப்படும் வேன் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்த வெளிநாட்டு சிகரெட்டுகளையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் இடம்பெற்று வருகின்றன.