மட்டக்களப்பில் பணி புரியும் அரச வைத்தியர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் இந்த சிரமங்களினால் வைத்தியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக இன்று (01.09.2023) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒன்றிய செயலாளர் வைத்தியர் சசிகுமார் தெரிவித்திருந்தார்.
உதாரணமாக வைத்தியசாலையில் நிலவும் மருந்து பற்றாக்குறையால் (குறிப்பாக கஷ்டப்பிரதேசங்களில் இருந்து வரும்) நோயாளிகளிடம் சில மருந்துகளை தனியார் மருந்தகங்களில் வாங்குமாறு கூறும் பொழுது தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக கூறியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாடு பூராகவுமே வைத்தியத்துறைக்கான ஆளணி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்கு முக்கியமான காரணங்களாக நாட்டினுடைய பொருளாதார நெருக்கடி, தூர இடங்களில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பணி புரியவரும் வைத்தியர்களுக்கு விடுதி வசதி இல்லாமையால் வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான வாழ்க்கை செலவின அதிகரிப்புகள் காரணமாகவே எமது நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்கு அதிக சம்பளத்திற்காக வேலைக்கு செல்கின்றனர்.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் தவநேசன் கூறுகையில், இதுவரையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து 20 ற்கும் அதிகமான வைத்தியர்கள் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் CT scanner திருத்த வேண்டிய நிலையில் இருப்பதால் நோயாளிகளை அம்பாறை மாவட்டத்திற்கு அனுப்பி சிகிச்சை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.