இறுதி யுத்தத்தின்போது, யுத்தத்தை நிறுத்துவதற்காக பலவாறான முயற்சிகள் இடம்பெற்றன. புலம்பெயர் சமூகம் மேற்குலக வீதிகளில் திரண்டு – குறிப்பாக கனடாவில் திரண்டு – தங்களின் கண்டனங்களை முன்வைத்திருந்தது. இதன் மூலம் யுத்தத்தைத் தடுத்து நிறுத்தலாமென்று அவர்கள் நம்பினர். ஆனால், அனைவரின் முயற்சியும் தோல்வியிலேயே முடிவுற்றது. யுத்தம் முடிவுற்றதன் பின்னரும் – மனித உரிமைகள் சார்ந்தும் – நீதி சார்ந்தும் – இலங்கை ஆட்சியாளர்கள்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியுமென்று பலரும் நம்பினர். உள்ளுக்குள்ளும் – வெளியிலும் பலவாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் நீயா- நானா என்று போட்டி போட்டுக்கொண்டு – ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு கடிதங்களை அனுப்பியிருந்தன. தங்களின் கடிதங்களைத்தான் ஆணையாளர் உள்வாங்கியிருப்பதாகவும் திருப்தி வெளியிட்டன. இடம்பெற்றது இனப்படுகொலையா அல்லது இல்லையா என்னும் விவாதங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் மோதிக் கொண்டனர். வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானம் ஒன்றும் கொண்டுவரப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு விடயங்களை கொண்டு செல்வது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
இதில், யார் சரி – பிழையென்றும் விவாதங்கள் இடம்பெற்றன. சாதாரணமக்களோ இவ்வாறான விவாதங்களை வழமைபோல் சாதாரணமாகக் கடந்து சென்றனர்.இன்று அனைத்து விவாதங்களும் ஒன்றுமில்லாமல் போய்விட்டன.விகாரைகள் நிர்மாணிப்பதை எதிர்க்க வேண்டும் – என்பதாக பழைய இடத்துக்கே தமிழர் அரசியல் நகர்த்தப்பட்டிருக்கின்றது. இப்போதும்கூட விகாரைகளை ஓர் ஆக்கிரமிப்பு கருவியாக சிங்கள – பௌத்த தரப்புகளால் கையாள முடிகின்றதென்றால் – கடந்த 14 வருடங்களாக இடம்பெற்ற விவாதங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகத்தானே இருக்க முடியும்.
இதிலிருந்து, தமிழர் தரப்புகள் எதனை கற்றுக்கொள்ளப் போகின்றன? தொடர்ந்தும் வெறும் சுலோகங்களை உச்சரித்துக் கொண்டு, ஆங்காங்கே ஒரு சில மணித்தியால எதிர்ப்புகளை காண்பித்துவிட்டு -கலைந்து சென்று கொண்டிருக்கப் போகின்றனவா – ஏனெனில், எதிர்ப்புகளால் எதனையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
முக்கியமாக, விகாரைகள் நிர்மாணிப்பதை பௌத்த அமைப்புகள் கைவிடுவதாக இல்லை.தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதற்கு வழியில்லை. சட்ட ரீதியில் விடயங்களை கையாண்டும் எதுவும் நடைபெறவில்லை. பௌத்த மத விவகாரத்தில் அரசாங்கம் உருப்படியான தலையீடுகளை செய்வதாகவும் இல்லை. இந்த விடயங்கள் தொடர்பில் வெளியாரும் தலையீடு செய்ய விரும்பவில்லை.
இது ஒரு சிக்கலான விடயமென்றே அவர்களும் கருதுவதாகத் தெரிகின்றது. இலங்கையில் தலையீடு செய்யும் அமெரிக்கா மற்றும் ஏனைய மேற் குலக நாடுகள் – ஒரு விடயத்தில் கவனமாக இருப்பதாகத் தெரிகின்றது.
அதாவது, பெரும்பான்மை சிங்கள மக்களை அதிகம் அந்நியப்படுத்தாத வகையில்தான் விடயங்களை கையாள வேண்டுமென்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். ஆட்சியை தீர்மானிக்கும் மக்களாக அவர்கள் இருப்பதால் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டுமாயின், சிங்களவர்களை அதிகம் விரோதித்து கொள்ளக்கூடாது. ஏனெனில், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும்கூட, இலங்கையின் அரசியலானது எதிர்பார்த்தவாறு சிங்கள – பௌத்தவாத கட்டமைப்புகளின் பிடியிலிருந்து அதிகம் வெளியில் வரவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால் ஒன்றில் உச்சமான எதிர்ப்பில் தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டுநிற்க வேண்டும் – இல்லாவிட்டால் ஆட்சி மாற்றங்கள் மூலம் கிடைக்கும் இடைவெளிகளில் உடனடியாக எதனைப் பெற முடியுமோ அதனைப் பெற்றுக்கொண்டு படிப்படியாக நகர வேண்டும். இவை தவிர வேறுவழிகள் இல்லை.