இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் பதினேழு ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட தந்தையார் தான் இறப்பதற்கு முன் தன் மகனை பார்க்க உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தார்.
கல்வியங்காட்டில் உள்ள இல்லத்தில் ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்த போதே தந்தையார் சுந்தரலிங்கம் அருணகிரிநாதர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 2006ம் ஆண்டு 10ம் மாதம் 25ம் திகதி நல்லூர் அரசடி இராணுவ சோதனைச் சாவடியில் இராணுவத்தினால் எனது மகன் அருணகிரிநாதன் சுதன் பிடித்து செல்லப்பட்டார். அதன் பின்னர் சில காலம் எனது மகனை இராணுத்தினர் வைத்திருந்ததை எமது உறவினர்கள் நண்பர்கள் பலரும் கண்டு எனக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
குறித்த விடயத்தை பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியபோதும் அப்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசியபோது 48 பேர் கொண்ட கைதிப்பட்டியலில் தனது மகனும் இருப்பதை உறுதிப்படுத்திய நிலையில் மகனின் விடுதலையை கோரியபோதும் அது சாத்தியப்படவில்லை என்றார்.