சனல் – 4 தொலைக்காட்சியின் – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான காணொலி பல்வேறு மட்டங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. ராஜபக்ஷக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான
ஒரு சதியாகவே இவ்வாறானதொரு கொலை நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர் – என்னும் பார்வையை இந்தக் காணொலி ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனை கோட்டாபய ராஜபக்ஷ மறுத்திருக்கின்றார். ராஜபக்ஷ தரப்பைப் பொறுத்தவரையில் இது தங்களுக்கு எதிரான ஒரு சதி. தங்கள்மீது பாரதூரமான பழியொன்றை சுமத்தி தங்கள் அரசியல் வாழ்வுமீது நிரந்தரமான கறையை ஏற்படுத்துவதுதான் இதற்கு பின்னாலுள்ள நோக்கம். எதிர்கட்சிகளை பொறுத்தவரையில் தங்கள்
அரசியல் எதிரிகளை கிழித்துத் தொங்கவிடுவதற்கு கிடைத்திருக்கும் அருமையானதொரு வாய்ப்பு. அதனை அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பது அரசியலில் ஆச்சரியமானதல்ல.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோது ரணில் – மைத்திரி அரசாங்கத்தை கிழித்துத் தொங்கவிடுவதற்கான ஒரு துருப்புச்சீட்டாக ராஜபக்ஷக்கள் அதனை பயன்படுத்திக் கொண்டனர். நாடு மிகப்பெரும் பாதுகாப்பு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது – அதனை சரி செய்வதற்கு தங்களை ஆதரிக்குமாறு பிரசாரங்களை முன்னெடுத்தனர். எனவே, அரசியலை பொறுத்தவரையில் வாய்ப்புகள் கிடைத்தால் ஒவ்வொருவரும் அதனை பயன்படுத்திக் கொள்ளவே முயற்சிப்பர். இது தேர்தல் அரசியலில் மிகவும் சாதாரணமானது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றதும் விசாரணைக் கதைகள் முடிந்துவிடும். மக்களும் சிறிது காலத்தில் அனைத்தையும் மறந்துவிடுவர்.ஆனால், சனல் – 4 காணொலி பிறிதொரு சிக்கலை ஏற்படுத்தலாம். இந்தக் காணொலி முற்றிலுமாக முஸ்லிம் நபர் ஒருவரின் – அதிலும் இராணுவ புலனாய்வு பிரிவோடு இணைந்து செயல்பட்டாரென (அவரே ஒப்புக் கொள்கின்றார்) கூறிக்கொள்ளும் ஒரு முஸ்லிம் நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே நகர்கின்றது.
முஸ்லிம்கள் தொடர்பில் கடும்போக்கு சிங்கள தரப்புகளிடம் ஏற்கனவே பலமான சந்தேகங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் ராஜபக்ஷக்கள்மீது விரல் நீட்டுவதன் மூலம், ராஜபக்ஷக்களை ஆதரித்தவர்கள் அனைவரின் நம்பகத்தன்மையும் அவர்களின் ஈடுபாடும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றது. இந்த நிலைமை முஸ்லிம்கள் நம்பத்தகுந்த தரப்புகள் அல்ல என்னும் பார்வையொன்றை மீண்டும் சிங்கள தேசியவாத தரப்புகள் மத்தியில் தீவிரப்படுத்தலாம். அரசாங்கபடைப் பிரிவுகளில் செயல்பட்டுவரும் அனைத்து முஸ்லிம்கள் மீதும் சந்தேகம் கொள்வதற்கான சு+ழலை ஏற்படுத்தலாம்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்த சிங்கள தேசியவாத குழுக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் ஓர் இலக்குக்காகவே அவரை ஆதரித்திருந்தனர். அவரை வெற்றி பெற செய்வதன் ஊடாக தங்களது அரசியல்
எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யலாம் என்னும் நோக்கிலேயே அவருடன் அணிசேர்ந்தனர். ஆனால், கோட்டாபயவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அது கேள்விக்கு உள்ளாகிவிட்டது. இந்த நிலையில் தற்போது, ஒரு சதி முயற்சி மூலம் இஸ்லாமிய தற்கொலையாளிகளை வைத்து சொந்த மக்களையே கொன்று ஆட்சிக்கு வந்திருப்பதான குற்றச்சாட்டு அவர்களை பெரியளவில் பாதிக்கக்கூடியது.இவ்வாறானதொரு பெரும் பழிக்கான சான்றாக ஒரு முஸ்லிம் செயல்பட்டிருக்கின்றார் என்று எண்ணும்போது முஸ்லிம் எதிர்ப்பு தென் பகுதியில் தீவிரமடைய வாய்ப்பு உண்டு.