இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவின் கடிதத் தலைப்பில் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட இழுக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 சர்வதேச ஊடகம் வெளியிட்ட ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ள ஆவணத்திலேயே இந்த பெயர் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ என அச்சிடப்பட வேண்டிய பெயரானது (“குர்துதுபூர்யு ருர்ஜபுக்ஷ” “කූර්ඩුඩුපුර්යූ රුර්ජපුක්ශ”) என அச்சிடப்பட்டுள்ளது.
ஒருவர் வெளியிடும் அறிக்கையென்பது ஏனையவர்களுக்கு தனது கருத்தினை தெரிவிக்கின்ற பிரதான தொடர்பாடல் முறைமையாகும். இங்கு முன்னாள் ஜனாதிபதியினுடைய கடிதத்தலைப்பில் அதுவும் அவருடைய பெயரிலுள்ள தமிழ் பிழையினை கண்டுகொள்ளாமல் நாட்டுமக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தனது தரப்பு நியாயத்தினை முன்வைத்திருப்பது என்பது அவ்வறிக்கையில் எந்தளவு உண்மைத்தன்மை இருக்கிறது என்பதனையே யோசிக்க தூண்டுகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தன்னை பற்றி சாதகமான விடயங்கள், தான் நிறைவேற்றி தருவதாக பல நம்பிக்கை வார்த்தைகளை பல மேடைகளில் கூறினாலும் இவருடைய இந்த செயற்பாடானது அவரது உண்மையான மனநிலையையும் உளப்பாங்கினையும் தெளிவாக எமக்கு காட்டி நிற்கின்றது.
உத்தியோக பூர்வ அறிக்கையினை வெளியிடும்போது ஒருதடவைக்கு பலதடவைகள் சரிபார்த்தல் என்பது மிக முக்கியமானது. அரச உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசகரும மொழி அறிவு முக்கியம் என எதிர்பார்க்கும் அரசாங்கம் நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்தவருக்கும் இது பொருந்தும் என ஏன் நினைக்கவில்லை. இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதிலிருந்து அது வெளிவரும்வரை அவருடைய அலுவலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களில் ஒருவருக்கு கூட அவருடைய பெயர் சரியாக இல்லை என்பது விளங்கவில்லையா? அல்லது முன்னாள் ஜனாதிபதியினுடைய ஆவணத்தில் பிழை இருப்பதை கூறினால் தமது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் கூறவில்லையா? இல்லையெனில் தமிழ் என்பது இலங்கையில் சிறுபான்மையினரின் மொழி தானே என்ற அசமந்த போக்கா? என பல கேள்விகள் எழுகின்றன. தமிழ் பிரதேசத்திலிருந்து நாட்டின் எப்பாகத்திற்கும் அரசவேலைக்கோ, தனியார் வேலைக்கோ செல்லும் இளைஞர்களிடம் முன்வைக்கும் முதல் கேள்வி சிங்களம் தெரியுமா? என்பதே. ஆனால் இங்கு அரச அமைச்சுகளிலும் திணைக்களங்களிலும் பணிபுரியும் பெரும்பான்மை சமூகத்தினரிடம் தமிழ் மொழி பற்றிய அறிவினை பரிசீலிக்காமல் பணிக்கமர்த்துவது மட்டும் எந்தவிதத்தில் நியாயம் என தெரியவில்லை.
மறுபுறம் குறித்த பிரச்சனையை ஆழமாக ஆராய்ந்தால், தனது உத்தியோகபூர்வ கடித்த தலைப்பில் அதுவும் தனது பெயரிலே உள்ள தமிழ் பிழையினை கண்டுகொள்ளாத ஒருவர் தமிழ் மக்களின் பிரச்சனையை தான் அதிகாரத்தில் இருந்த பொழுது எவ்வாறு கையாண்டிருப்பார் என்பதை அவருடைய இந்த நடவடிக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிக்காட்டி நிற்கின்றது. மொழி என்பது ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் அடிநாதமாக விளங்குகின்ற ஒரு அடிப்படை விடயம். அதைக்கூட புரிந்துகொள்ளமுடியாத ஒருவர் இந்நாட்டில் ஜனாதிபதியாக சிலவருடம் இருந்திருக்கின்றார் என்பதை பார்க்கின்றபொழுது அவரை தெரிவு செய்தவர்களும் அவருக்கு துணையாக நின்றவர்களும் இது குறித்து வெட்கப்பட வேண்டும்.
அவரின் இந்த மாறாத தமிழ் விரோத மனநிலையுடன்தான் 2005 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த அவருடைய அண்ணன் மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்தார். அத்தோடு அவர் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டவரைக்கும் அத்தோடு கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த இரண்டு வருடங்களும் மாறாத இந்த மனநிலை தான் அவரை தமிழ் விரோதப்போக்குடன் சிந்திக்க வைத்துள்ளது. இப்படியான ஒரு சூழலில்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் யுத்தத்திற்காக இவர் முன்னெடுத்த நடவடிக்கைகள், இவர் தலைமைதாங்கி நடத்திய கொடூரங்களை எல்லாம் பார்க்கவேண்டியிருக்கின்றது. இவைகள் வெறுமனே யுத்தத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு அப்பால் தலைமை தாங்கி நடத்திய ஒருவருடைய மனநிலையின் வெளிப்பாடாகவே கொள்ளப்படவேண்டியுள்ளது.
யுத்தகாலத்தில் இவர் முப்படைகளுக்கு தலைமை தாங்கியதும் குறிப்பாக இராணுவ படையணிகளை தனது நேரடி கண்காணிப்பின் கீழ் வழிநடத்தியதும் அதன் விளைவாக கணக்கிலடங்காதோர் காணாமலாக்கப்பட்டதும், வயது வித்தியாசமின்றி பாலியல் வன்புணர்வுகளை செய்ததும், அருவருக்கத்தக்க துன்புறுத்தல்களை செய்து தமிழ் சமூகத்தை மண்ணோடு மண்ணாகியதும் இதனடிப்படையிலேயே நடந்திருக்கின்றது. இது ‘Gotta War’ என மார்தட்டி கூறும் அவரே, ‘யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை’ எனவும் கூறுகிறார் என்றால் உண்மையிலேயே இவரது மனநிலை எப்படிப்பட்டதென்பதை நாம் சற்று உற்றுநோக்கவேண்டிய கட்டத்தில் இன்று இருக்கின்றோம். இவருக்கு உதவியாக யுத்தகாலத்தில் செயற்பட்ட பிள்ளையான், கருணா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் மேலும் பலரும் இவருடைய இந்த மனநிலையை ஏற்றுக்கொண்டவர்களாகத்தான் இவருடன் சேர்ந்து செயற்பட்டிருக்கின்றார்கள். தமிழ் தலைவர்கள் என்று தங்களை கூறிக்கொண்டவர்களே தமிழ் விரோத மனப்பான்மையுடன் தமிழ் மக்களை கொலை செய்வதற்கு ஆதரவாக இருந்திருக்கின்றார்கள் என்றால் இவர்களையெல்லாம் எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது என்ற கேள்வி எமக்குள் எழுந்து நிற்கின்றது.
ஒட்டு மொத்தத்தில் இவர்கள் செய்த அநியாயங்களையும் அக்கிரமங்களையும் சேனல் 4 ஊடகம் முழு உலகிற்கே படம்போட்டு காட்டியிருக்கிறது. தற்போது நடக்கின்ற சம்பவங்களை நுணுக்கமாக ஆராய்ந்தால் சேனல் 4 வெளியிட்ட காணொளியிலுள்ள அத்தனை விடயங்களும் உண்மைக்கு உண்மையானவையாகவே காணப்படுகின்றது. ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்’ திட்டத்தின் அடித்தளம் முதல் அது நிறைவேற்றப்பட்டதுவரை நடந்தவை என்ன என குறித்த காலப்பகுதியில் பிள்ளயாணினுடைய வலது கையாளான அசாத் மௌலானா அவரது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பிள்ளையானால் கொல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியலை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இவ்வாறாக நடந்த தொடர்ச்சியான அக்கிரமங்களை செய்தவர்கள் இன்றும் பாதுகாப்பாக தங்களை நல்லவர்கள் என சொல்லிக்கொண்டு திரிவது மிகக்கேவலகமாக விடயம். கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலகட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்திருக்கின்றாரா? என்ற சர்ச்சைகளும் அப்போது எழுப்பப்பட்டிருந்தன . நடந்திருக்கின்ற இந்த விடயங்களை பார்க்கின்றபொழுது அது உண்மையென்று நினைப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே தமிழ் மொழியின் தனித்துவத்தையும் தமிழ் மக்களுடைய தனித்துவத்தையும் மதிக்காதவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை அவர்களால் தமிழ் பேசும் மக்களையும் அவர்களுடைய பிரச்சனைகளையும் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்பது தான் கோட்டாபாயவின் இந்த கடித்ததலைப்பு எங்களுக்கு சொல்லி நிற்கின்றது.