புத்தளம் தில்லையடி பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது முச்சக்கர வண்டி கடத்திச் செல்லப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தில்லையடி பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தையான அப்துல் லத்தீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு (21) வாடகை சவாரி (Hire) ஒன்றுக்கு செல்வதாகக் கூறி யாரோ ஒருவரால் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட அவர், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மருமகன் புத்தளம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அவரது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடப்பனாவில்லுவ வீதிக்கு அருகிலுள்ள வடிகால் ஒன்றில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வாடகைக்குச் செல்வதாகக் கூறி அவரைத் திட்டமிட்டு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து கொடூரப் படுகொலையைச் செய்துவிட்டு முச்சக்கர வண்டியைத் திருடிச் சென்றுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
அதேசமயம் படுகொலை செய்யப்பட்ட நபர் சிரேஷ்ட ஒளிபரப்பாளர் ஏ.எல். இர்பான் அவர்களின் தந்தை என தகவல்கள் வெளியாகியுள்ளது.








