சென்னையில் ரூ 20 கோடி வசூலித்துவிட்டு ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்து ஏமாற்றிவிட்டதாக இசையமைப்பாளரும் பாஜக நிர்வாகியுமான தீனா விமர்சித்துள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் வெளிநாடுகளில் இசைக் கச்சேரியை நடத்தி வந்த நிலையில் சென்னையில் நடத்துமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு கஷ்டம் என ரகுமான் தெரிவித்துவந்தார்.
ஆனால் தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்ததால் அரசிடம் அனுமதி கேட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்று சென்னையில் பலத்த மழை பெய்ததால் நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து வேறு தேதியில் அதே டிக்கெட்டுடன் இசைக் கச்சேரி நடத்தப்படும் என ரகுமான் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை பனையூர் அருகே ஆதித்யராம் மைதானத்தில் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகளை ஏசிடிசி நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
அன்றைய தினம் இரவு 7 மணிக்கு இசைக் கச்சேரி தொடங்கியது. ரூ 3000 முதல் ரூ 27 ஆயிரம் வரை டிக்கெட் 4 பிரிவுகளில் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இவர்கள் ஆன்லைன் மூலம் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றதாக தெரிகிறது. ஆனால் மைதானத்தில் லட்சக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிக்கெட் இருந்தும் பலரால் உள்ளே செல்ல முடியவில்லை. மைதானம் நிரம்பிவிட்டதாக கூறி அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அப்படியே உள்ளே போனவர்களும் தங்களுக்கான இடத்திற்கும் இருக்கைக்கும் செல்ல முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என கருதி வெளியே வந்துவிட்டனர். பலர் டிக்கெட் இருந்தும் வீட்டுக்கு திரும்பினர். இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்த கூட்ட நெரிசலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ரகுமான் பாடுவதே சரியாக கேட்கவில்லை, அந்த அளவுக்கு மோசமான ஸ்பீக்கர்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த நிலையில் இந்த குளறுபடிகளுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டனர். அது போல் ஏ.ஆர்.ரகுமானும் கச்சேரிக்கு வரமுடியாமல் திரும்பிச் சென்றவர்கள் அந்த டிக்கெட் நகலை இணையதள முகவரிக்கு அனுப்புமாறு கூறியிருந்தார். அது போல் தானே பலியாடு ஆகிறேன் என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து இசையமைப்பாளரும், பாஜக நிர்வாகியுமான தீனா கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள்தான் பொறுப்பு. இந்த நிகழ்ச்சிக்கு எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் போன்ற எந்தத் திட்டமிடுதலும் அவர்களிடம் இல்லை. இதனால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. முதல்வரின் கான்வாய்க்கு கூட அனுமதி மறுக்கப்பட்டதாகதெரிகிறது. இந்த நிகழ்ச்சி ஏ.ஆர்.ரகுமானுக்கு மிகப் பெரிய பாடம். இந்த நிகழ்ச்சியில் நானும் இருந்தேன். அவர் தமிழர்களை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்வேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் கழிப்பறை , தண்ணீர் வசதியானது அவசியமான ஒன்று. ஆனால் இவை அங்கு இல்லை. கிட்டத்தட்ட ரூ 20 கோடி வரை வசூலாகியுள்ளது. இந்த பணத்தை வாங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிவிட்டார்கள். ரகுமான் எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அது எனக்கு தெரியாது என கூறியுள்ளார். இது பொறுப்பற்ற பேச்சு. இது போன்ற பேச்சுகள் கூடாது. ரசிகர்கள் அவரை நம்பித்தான் வந்தார்கள். இவ்வாறு தீனா தெரிவித்துள்ளார்.