தற்போது ஸ்மார்ட்போன், லேப்டாப், டெஸ்க்டாப் போன்ற எந்த சாதனங்களைப் பயன்படுத்தினாலும் கட்டாயமாக நம் அனைவரிடமும் ஒரு இமெயில் ஐடி-யாவது நிச்சியம் இருக்கும். இன்னும் சிலரிடம் குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஜிமெயில் கணக்குகள் இருக்கக் கூடும்.
குறிப்பாக நம்மிடம் எத்தனை ஜிமெயில் கணக்குகள் இருந்தாலும் சரி, அதில் டன் கணக்கில் மெயில்கள் குவிந்திருக்கும். இதில் பாதிக்கும் மேலான மெயில்கள் நமக்குத் தேவையில்லாதவையாகத் தான் இருக்கிறது. இருப்பினும் நாம் இதை டெலிட் செய்யாமல் வைத்திருப்பதனால் நமது ஜிமெயில் ஸ்டோரேஜ் நிரம்பிவிடுகிறது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் ஜிமெயில் ஒரு புதிய வசதியைக் கொண்டுவர இருக்கிறது. அதாவது ஜிமெயில் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப் செயலியில் செலக்ட் ஆல் (Select all) எனும் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது வெப் வெர்ஷனில் இந்த அம்சம் இருந்து வரும் நிலையில் இனி ஆப்பிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி @AssembleDebug என்ற X (ட்விட்டர்) தளத்தில் இது குறித்து அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மல்ட்டிபில் இ-மெயில் செலக்ட் செய்யும் போது செலக்ட் ஆல் அம்சம் ஆட்டோமேடிக்காக காண்பிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் கூகுள் தற்போது இந்த அம்சத்தை 50 இ-மெயில்களை மட்டுமே மொத்தமாக டெலிட் செய்யும்படி லிமிட் செய்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. காரணம் என்னவென்றால் ஜிமெயில் சர்வர் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீங்கள் மீண்டும் செலக்ட் ஆல் கொடுத்து மற்றொரு 50 இ-மெயில்களை செலக்ட் செய்ய முடியும். இதுதவிர டி-செலக்ட் ஆல் (Deselect All) ஆப்ஷனும் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று தெளிவாக தெரியவில்லை. ஆனாலும் விரைவில் இந்த அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கூகுள் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறது என்றே கூறலாம். அதேபோல் இந்நிறுவனம் தங்களின் தனியுரிமை கொள்கைகளை அவ்வப்போது புதுப்பித்து வருகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக லாகின் (log in) செய்யப்படாமல் அல்லது பயன்படுத்தாமல் வைத்திருக்கும் அக்கவுண்ட்களை(கணக்குகளை) நீக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.
கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில் டிசம்பர் 2023 முதல் இந்த நடவடிக்கையைத் தொடங்க உள்ளதாக் குறிப்பிட்டுள்ளது. அதாவது லாகின் செய்யப்படாமல் அல்லது பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை இந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பயனர்களுக்கு மின்னுசல்களை அனுப்பத் தொடங்கிவிட்டது கூகுள் நிறுவனம். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கணக்குகள் இருந்து அவை நீக்கப்பட்டால், அதில் பதிவுசெய்து வைத்திருந்த மின்னஞ்சல்கள், டாக்ஸ், கோப்புகள், டிரைவ், ஃபைல்கள், யூடியூப் சேனல்கள், கூகுள் ஃபோட்டோஸ் போன்றவைகளும் உங்கள் கைவிட்டுப் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இனிமேல் இந்த பழைய கணக்கு எனக்குத் தேவை இல்லை என்று நினைப்பவர்கள் மட்டும், தங்கள் கூகுள் கணக்குகளை அப்படியே விட்டுவிடலாம். மற்றவர்கள் உடனடியாக தங்கள் கணக்குகளை ஆக்டிவ் செய்ய வேண்டும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த புதிய கொள்கை தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பள்ளிகள், கல்லூரிகள் அல்லது வணிகங்கள் போன்ற நிறுவனங்களுக்கான கணக்குகளை இது எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் நீங்கள் இரண்டு ஆண்டுகளாக உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தாவிட்டாலும், உங்களது கணக்கின் மூலம் ஏற்கனவே ஏதேனும் கூகுள் ப்ளே சந்தா திட்டம் செயல்பாட்டில் இருந்தால் கூகுள் நிறுவனம் உங்களது கணக்கை நீக்காது என்பது குறிப்பிடத்தக்கது.