அமெரிக்காவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியர்களும் பெருமளவில் பல்வேறு மாகாணங்களில் குடிபுகுந்து வாழ்ந்து வருகின்றனர். ஜார்ஜியா மாகாணத்தில் இந்தியாவை சேர்ந்த இந்து அமெரிக்க சமூக மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் மாகாண வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.
இதனை கவனத்தில் கொண்டு, ஜார்ஜியாவில் அக்டோபர் மாதம் இந்து பாரம்பரிய மாதம் என அறிவிக்க முடிவானது. இதுபற்றி ஜார்ஜியா மாகாண கவர்னர் பிரையன் கெம்ப் வெளியிட்ட அறிவிப்பில், இந்து பாரம்பரியம், கலாசாரம், மரபுகள் மற்றும் மதிப்புகள் ஆகியன அவற்றை பின்பற்றுவோருக்கு, வாழ்வின் எண்ணற்ற பிரச்சனைகளுக்கு விலைமதிப்பற்ற தீர்வுகளை வழங்குகின்றன.
வழிகாட்டுதலுக்காக இந்து மத போதனைகளை தேடி பார்க்கும் கோடிக்கணக்கான தனிநபர்களுக்கு ஊக்கம், பிரதிபலிப்பு மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றுக்கான ஒரு வளமாகவும் அவை சேவையாற்றுகின்றன என கவர்னர் குறிப்பிட்டு உள்ளார்.
ஜார்ஜியா மாகாணத்தின் நலனுக்கு பெரியளவில், இந்த துடிப்புடனான இந்து அமெரிக்க சமூகம் பங்காற்றி, அதன் குடிமக்களை செழிப்படைய செய்துள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இந்து மதத்தில் அக்டோபர் மாதம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்து பண்டிகைகளான நவராத்திரி மற்றும் தீபாவளி ஆகிய முக்கிய விழாக்கள் வருகின்றன.