கிழக்கு மாகாண அபிவிருத்தி குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இனி எந்த நேர்காணலிலோ கூட்டங்களிலோ செயற்திட்டங்களிலோ உரையாற்றும் போது உங்களது அரசியலை பற்றி மட்டும் பேசுங்கள். போர்க்கால சூழலைப்பற்றி பேசவேண்டாம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயேஅவர் இதனை தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஊடகங்களிலோ கூட்டங்களிலோ உரையாற்றும்போது போர்காலம் பற்றி சிலவற்றைத்தான் கூறுகிறோம் நாங்கள் முழுவதுமாக கூறினால் மக்களாலேயே நீங்கள் விரட்டியடிக்கப்படுவீர்கள். குறிப்பாக திருகோணமலையில் பிள்ளையான் குழுவினர் பெண்கள் இருந்த வீட்டுக்களின் கூரைகளை கழட்டி வீட்டுக்குள் புகுந்து பல அடாவடி நடவடிக்கைளில் ஈடுபட்டனர். அதனையெல்லாம் நாம் கூறினால் நிலைமை எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள்.
பல அட்டூழியங்களை செய்து விட்டு இன்று நல்லவர் போல் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து ஜல்லிக்கட்டு ராஜாவை போல் திரிகின்றீர்கள். ஆனால் உங்களுகாக நின்று யுத்தம் புரிந்த நாங்கள் பல இழப்புகளை சந்தித்தது மட்டுமல்லாது இன்று நீங்கள் பாடும் வசைகளை கேட்கும் துர்பாக்கிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம் என்றார் .
மேலும் நீங்கள் எங்களது தேசிய தலைவரை பற்றி, மாவீரர்களை பற்றி, போராட்டத்திற்கு உதவியவர்களை பற்றியெல்லாம் பேசுவதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க நாங்கள் மடையர்கள் அல்ல. எங்களுக்கும் பொருத்தமான காலம் வரும் என்று இன்றுவரை நாங்கள் பொறுமையாக இருக்கின்றோம் என்பதனை முதலில் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என தனது கண்டனத்தை தெரிவித்தார்.