இந்த ஆண்டு, நாடு முழுவதும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 15,763 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் நடைபெற்ற தேசிய போஷாக்கு மாதத்துடன் இணைந்து அந்த பணியகம் நடத்திய கணக்கெடுப்பின்படி, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு அதிகளவான குழந்தைகள் பதிவாகியுள்ளனர்.
வயதுக்கு ஏற்றவாறு குழந்தை எடை குறைவாக இருந்தால், அத்தகைய குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என அழைக்கப்படுவதுடன், இந்த ஆண்டு எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 15.3% ஆக இருந்த எடைக்குறைவான குழந்தைகளின் சதவீதம் இந்த ஆண்டு 17%ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை அவதானிக்கும் போது , கடந்த ஆண்டை விட எடை குறைவாக உள்ள தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கர்ப்பிணித் தாய்மார்களிடையே ரத்தசோகை நிலை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு 14.5% ஆக இருந்த குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 15% ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.