மினுவாங்கொடையை வர்த்தக ரீதியில் தூங்கா நகரமாக மாற்றுவதற்குத் தேவையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பத்தரமுல்லை, செத்சிறிபாயிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நவீன உலகிற்கு ஏற்ற வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மினுவாங்கொட நகரை தூங்கா நகரமாக மாற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மினுவாங்கொடை நகர திட்டத்தை தயாரிக்கும் போது, வர்த்தக பெறுமதியை அதிகரிக்கும் வகையில் கலப்பு அபிவிருத்தி திட்டமாக தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை நகரில் இருந்து விமான நிலையத்தை மிக இலகுவாக சென்றடையும் வகையில் மினுவாங்கொடை நகருக்கு அருகில் உள்ள அம்பகஹவத்த பகுதியில் இருந்து விமான நிலையம் வரை புதிய வீதியொன்று அமைக்கப்பட உள்ளது.
இதற்காக ஒன்பது ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தனியார் மருத்துவமனைகள், வாகனத் தரிப்பிடங்கள், புதிய வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்கங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றுடன் நகரம் அபிவிருத்தி செய்யப்படும்“ என்றும் அவர் கூறியுள்ளார்.