தியாகத் தீபம் திலீபன் அவர்களின் உருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்தி மூதூரை சென்றடைந்தது.
இந்நிலையில் மூதூர் -சேனையூர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை தியாகத் தீபம் திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர்தூவி தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
குறித்த ஊர்தி பயணமானது கடந்த 15 ஆம் திகதி பொத்துவிலிலிருந்து ஆரம்பமாகியதோடு 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் -நல்லூர் பகுதியைச் சென்றடைந்து நிறைவடையவுள்ளது.
இவ் ஊர்தி பயணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
அண்ணண் திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிரிழந்த வேளை இந்தியா கைகட்டி பார்த்து கொண்டிருந்தது.
நாம் ஊர்தி பயணத்தை ஆரம்பத்ததிலிருந்து எமக்கு தொடர்ந்தும் குழப்பங்களும், அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டே இருக்கின்றது.இதற்கு பின்னால் அரச புலனாய்வாளர்கள் இருக்கின்றனர்.
நேற்று சேருவில பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வேறு திசையூடாக மூதூரை வந்தடைந்துள்ளோம். திருகோணமலை நகரில் வைத்தும் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கள மக்கள் பௌத்த விகாரைகள் கட்டி சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.எங்களுக்காக உயிர்நீத்த ஒருவரை எமக்கு ஞாபகமூட்ட முடியாத நிலை இங்கு காணப்படுகிறது என்றார்.