திருகோணமலை கிண்ணியா வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலய மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து பாடசாலை மைதானத்தை பெற்றுத்தருமாறு கோரி காக்காமுனை றஹ்மானியா பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள சந்தியில் இன்று (19) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பாடசாலைக்கு சொந்தமான காணியை தனி நபரொருவர் அத்துமீறி தன்னுடைய காணி என எல்லையிடுவதைக் கண்டித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 25 வருட காலமாக மைதானமாக பயன்படுத்தி வந்த குறித்த இடத்தை தனி நபரொருவர் தன்னுடைய காணி என ஓரிரு வருடங்களாக அத்துமீறி எல்லையிட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் “வேண்டும் வேண்டும் மைதானம் வேண்டும்” “போராடுவோம் போராடுவோம் மைதானம் கிடைக்கும் வரை போராடுவோம் ” என்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசத்தை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு குறிஞ்சாக்கேணி கோட்டக்கல்வி அதிகாரி ஆர்.நஸீம் மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி சமுகமளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி அது தொடர்பான விளக்கத்தை வழங்கியதோடு இதற்கான தீர்வுகளை பெற்று தருவதாக கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி பெற்றோர்களிடம் உறுதி அளித்தார் .
அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மாணவர்கள் பாடசாலைக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.