ஜனாதிபதி செயலணியில் பணியாற்றுவதாக கூறி, வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக பாரியளவான நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரை, வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நியூசிலாந்து, நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டம் உள்ளதாகவும், அதற்கு ஒருவருக்கு தலா 15 இலட்சம் ரூபா செலவாகும் எனவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த தொகையில் 7 இலட் சத்து 50 ஆயிரம் ரூபாவை முற்பணமாக செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இந்தநிலையில், கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகநபரை நூதனமான முறையில் பத்தரமுல்லை பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.இதன்போது, சந்தேகநபர், ஜனாதிபதி அலுவலகம் என்ற பெயர்ப் பலகையை காட்சிப்படுத்திய வகையில் கார் ஒன்றில் குறித்த பகுதிக்கு பிரவேசித்துள்ளார்.
அத்துடன், தாம் ஒரு அரச அதிகாரி என கூறியதுடன், வெளிநாட்டில் தொழில் வழங்கும் வகையிலான போலி
ஒப்பந்தம் ஒன்றையும் காண்பித்துள்ளார்.இந்தநிலையில், அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.