திருகோணமலையில் திலீபன் நினைவு ஊர்தியை தாக்கிய 6 சிங்களவர்களும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.இதேவேளை, நேற்றைய வழக்கு விசாரணையில் முன்னிலையாகாத தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட 4 பேருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
கடந்த 17 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரை சென்று கொண்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி திருக்கோணமலையில் உள்ள சர்தாபுரம் என்ற இடத்தில் சிங்கள இனவாத குழுக்களால் தாக்கப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தாக்கப்பட்டு
இருந்தார்.
இந்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் பொலிசாரால் கைது
செய்யப்பட்டு இருந்தனர்.இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த நபர்களை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்புக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அடையாள காட்டுவதற்காக வாதி தரப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் பாதிக்கப்பட்ட இருவர் திருகோணமலைநீதவான்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். எனினும் அன்று பொலிசார், சந்தேகநபர்களை
அடையாள அணி வகுப்புக்கு கொண்டுவர தவறி இருந்தனர்.இதனால் அடையாள அணி வகுப்பு நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அடையாள அணிவகுப்பு இடம்பெற இருந்த நிலையில் வாதி தரப்பை சேர்ந்தவர்கள்,
யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் செயற்பாடுகளில் பங்கு கொண்டு இருந்தமையால்,
நீதிமன்றத்துக்கு வரவில்லை.இதனால், வழக்கு எதிர்வரும் 05.10.2023 தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுஇருந்தது.
அத்துடன் வாதி தரப்பை சேர்ந்த நான்கு பேருக்கும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் சீனன்குடா பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள்
இடையே முரண்பாடுகள் காணப்பட்டது குறித்து, மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்ஷினியால் பொலிசாருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. திருக்கோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்றுக் காலை 9.30 மணி முதல் 11.30 மணிவரை நீண்ட நேர இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மதியம் 1.30 மணியளவில் திருக்கோணமலையில் சமாதான சீர்குலைவு இடம்பெறும்
எனக்கோரி பொலிஸாரால் குறித்த வழக்கு மீள அதே தினத்தில் விசாரணைக்கு எடுக்கப்படுவதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பொலிஸாரின் வேண்டுதலை “சமாதான சீர்குலைவு” என்ற அடிப்படையில்
கவனத்தில் எடுத்து, நல்லெண்ண நோக்கில் நீதிபதி மீள மாலை 4.30 மணிக்கு வழக்கை விசாரணைக்கு
எடுத்துக் கொண்டார்.அந்த சந்தர்ப்பத்தில், கைதாகியுள்ளவர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என பொலிஸார் கோரினர்.“திருக்கோணமலையில் நாளை பிக்குகளால் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படும்” எனவும், சந்தேகநபர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்தனர்.இந்த நிலையில், மாலை 5.00 மணி அளவில் சந்தேகநபர்கள் 6 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.