அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று இடம்பெற்றது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களை சேர்த்தது.
இதையடுத்து 277 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 48.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
இதில், 116 புள்ளிகள் பெற்று ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக 115 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 2ம் இடத்தில் உள்ளது.
அதேபோல், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 118 புள்ளிகளுடனும், T20 தரவரிசையில் 264 புள்ளிகளுடனும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
இதன் மூலம் ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் ஒருநாள், டெஸ்ட், T20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.