மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் மாவட்ட அரசாங்க அதிபரினால் விசேட கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிக்காந்த் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தின் நேற்று முன்தினம் (22.09.2023) நடைபெற்ற விவசாய ஒருங்கிணைப்புக்குழுக்கூட்த்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் கால்நடை பண்ணையாளர்கள் தமது கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பில் கால்நடை பண்ணையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டியிருந்தனர்.
இதன் காரணமாக கூட்டத்தினை நடாத்தமுடியாத நிலையில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
விவசாய நடவடிக்கைகளுக்கான கூட்டங்கள் நடைபெறுகின்றபோதிலும் விவசாய செய்கை காலப்பகுதியில் தமது கால்நடைகளை கொண்டுசெல்வதற்கு ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதி அபகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமது கால்நடைகளை அப்பகுதிக்கு கொண்டுசெல்லமுடியாது எனவும் எமது மேய்ச்சல் தரை காணிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அத்துமீறிய குடியேற்றங்களை அப்புறப்படுத்த வேண்டும்” என கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிக்காந்த் பதிலளிக்கையில்,
குறித்த காணிகள் மகாவலிக்குரிய காணிகள் என்ற காரணத்தினால் அவர்கள் இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தங்களுக்கு தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் தாங்கள் கடந்த 09 தினங்களுக்கு மேலாக போராடிவரும் நிலையிலும் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் காணி அபகரிப்பாளர்கள் தமது செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் அதனை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் இதன்போது பண்ணையாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இது தொடர்பில் விசேட கூட்டத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் செய்யவுள்ளதன் காரணமாக இவற்றினை உயர் அதிகாரிகளை கொண்டு தீர்மானங்களை எடுக்கமுடியும் எனவும் தற்போது விவசாய கூட்டத்தினை நடாத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரிய நிலையில் விவசாய கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
எனினும் தமக்கான மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வரையில் தாங்கள் மாடுகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்வதில்லையென இங்கு பண்ணையாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விவசாய கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிக்காந்த் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.