அரிசிமலையில் பொதுமக்களை அச்சுறுத்தி அவர்களுக்கு சொந்தமான காணிகளை பிக்கு ஒருவர் அடாத்தாகப் பிடித்து வருகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்ப்பு வெளியிட்டவரை கனரக இயந்திரத்தின் மூலம் அச்சுறுத்தியதில் வாகனம் மோதி பெண் ஒருவர் காயமடைந்தார் என்று அறிய வருகின்றது.
திருகோணமலை – புல்மோட்டை – அரிசிமலை இராணுவம் மற்றும் கடற்படை ஆதரவோடு புதிய பௌத்த விகாரை அமைத்து வரும் பனாமுரே திலகவங்ச என்ற பௌத்த பிக்குவும் அவரின் சகோதரரும் தம்மை அச்சுறுத்தி காணிகளை அபகரித்து வருகின்றனர் என்று அப்பகுதியின் முஸ்லிம் மக்கள் குற்றஞ்சாட்டினர். கடந்த கடந்த வெள்ளிக்கிழமை 6 குடும்பங்களுக்கு சொந்தமான விவசாய காணிகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டன என்றும் கூறப்பட்டது.
காணிகள் பிக்குவால் அபகரிக்கப்படுவது குறித்து அறிந்தவர்கள் அங்கு சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். அப்போது கனரக இயந்திரத்தை இயக்கி பிக்குவின் சகோதரர் அவர்களை அச்சுறுத்தி விரட்டினார். அந்தச் சமயம், வாகனம் பெண் ஒருவரை முட்டியதில் அவர் காயமடைந்தார். சம்சுதீன் சுலைகா என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.