மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் மின்மானியில் மோசடி செய்த வீட்டு உரிமையாளர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்மானியில் சட்டவிரோதமாக மோசடி செய்து மின்சாரத்தை பெற்று வந்தமை மின்சாரசபையால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கொழும்பில் இருந்து வருகை தந்த உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் அந்த வீடுகளை சோதனையிட்டனர்.
இதன்போது, மின்சார மீற்றரை சோதனையிட்டபோது அதில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு வீட்டின் உரிமையாளர்களையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.