இலங்கையிலிருந்து சிறுவயதில் படகு மூலம் இந்தியா வந்து மீட்கப்பட்ட 37 வயதான ஜோய் என்ற இளைஞர், தனக்கு அடையாள அட்டை வழங்கி வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஜோய், தனது ஏழாவது வயதில் தந்தையுடன் மீன்பிடிப் படகில் சென்றபோது எதிர்பாராத விதமாக இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, படகில் அவரது பெற்றோர் இல்லாத நிலையில், இந்திய பாதுகாப்புப் படையினரால் அவர் மீட்கப்பட்டு மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறுவனாக இருந்ததால் அங்கிருந்து ஆசிரமத்திற்கு மாற்றப்பட்ட ஜோய், வளர்ந்த பின்னர் 2014ஆம் ஆண்டு மீண்டும் மண்டபம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அதிகாரிகள் அவரிடம் அடையாள அட்டை மற்றும் பெற்றோர் தொடர்பான விவரங்களைக் கேட்டுள்ளனர். அவற்றை வழங்க முடியாத நிலையில், இலங்கைக்குச் செல்ல முயன்றதாகக் கூறி புழல் சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவரை இலங்கைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மீண்டும் மண்டபம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், அங்கு அடையாள அட்டை வழங்கப்படாமல் உணவு மட்டுமே வழங்கப்பட்டதுடன், வெளியே செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அணுகி தனது நிலைமையை எடுத்துரைத்த போதிலும், பெற்றோரைக் கண்டறிந்து அவர்களுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பலமுறை அதிகாரிகளைச் சந்தித்து, தன்னை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறும் அல்லது இந்தியாவில் வாழ்வதற்கான அடையாள ஆவணங்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள ஆவணங்கள் இல்லாததால் வேலைவாய்ப்பைப் பெற முடியாமல் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வருவதாகவும், தற்போது பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் தங்கியிருந்து கிடைக்கும் உணவை உண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சிலருக்குக் கால்பந்து பயிற்சி வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
தனது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை காரணமாகப் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து, இந்தியாவில் வாழ்வதற்கான அடையாள ஆவணங்களைப் பெற்றுத்தர வேண்டும் என ஜோய் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஜோய்யிடம், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கியூ பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








