தலவாக்கலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன சோதனையில் 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
வீதி விபத்துகளை குறைக்கும் நோக்கில் நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவினரும், மோட்டார் வாகன பரிசோதகர்களும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
தலவாக்கலை ஊடாக பயணித்த சுமார் 40 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு குறைபாடுகளுடன் வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 4 தனியார் பேருந்துகள், 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து, குறித்த வாகனங்களின் வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டு, அவற்றை தற்காலிகமாக இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதி உறுதி செய்யப்படும் வரை குறித்த வாகனங்களை வீதிகளில் இயக்க முடியாது என நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.








