தாம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிதிநிதிகள் குழுவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்த போது, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் உழைக்கும் மக்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கை திருத்தியமைக்கப்படும் என்றும், தற்போதைய அரசாங்கம் தேசிய கடன் மறுசீரமைப்பு மூலம் பெரும் செல்வந்தர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு நிவாரணம் வழங்கி உழைக்கும் மக்களினது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படுத்தியுள்ள அழுத்தம் குறித்தும் தெளிவூட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கியூபா அல்லது பிற தீவிர சோசலிச நாடுகளின் உதவியுடன் அன்றி சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் எமது நாட்டுக்கும் நாட்டு மக்களையும் பாதிக்காத உடன்படிக்கைகள் மூலமே இந்நாடு தற்பொழுது முகம்கொடுத்துள்ள சூழ்நிலையிலிருந்து வெளிவர முடியும் என்றும், இதில் தற்போதைய அரசாங்கம் பின்பற்றி வரும் தங்களுக்கு நட்பாக இருக்கும் செல்வந்தர்களுக்கு சலுகை வழங்கும் உடன்படிக்கைகளுக்கு செல்லாது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உடன்படிக்கை எட்டப்படும் என்றும், இதற்கான பரந்த நோக்கையும் பார்வையையும் ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தம்புள்ளை அகுரம்பொட மத்திய கல்லூரிக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் வழங்கும் நிகழ்வில் நேற்று(26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அதே சமயம், அரச மாளிகைகளில் கோட் மற்றும் டை அணிந்து சொகுசாக இருக்கும் ஆட்சியாளர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் தேவைகளை கருத்தில் கொள்ளாது, 220 இலட்சம் மக்களின் தேவைகளை மையமாக வைத்தே தமது உடன்படிக்கை எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வியில் நிலவும் பேதத்தை நீக்கக்கூடிய வகையில் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள பாடசாலைகள் வசதிகளின் கூடிய பாடசாலைகளாக மாற்றியமைக்கப்படும் என்றும், சகல பாடசாலைகளிலும் கணினி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி ஆய்வகங்களை நிறுவி புதிய உலகிற்கு ஏற்ற கல்வி முறையை நோக்கி இந்நாட்டில் கல்வி முறை கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.