Leo Audio Launch Cancel (லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து) லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கிறது லியோ திரைப்படம். விஜய் நடித்திருக்கும் இப்படத்தின் ரிசல்ட் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களின் ரிசல்ட் நெகட்டிவாகவே அமைந்தது.
லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த,கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைக்க செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது.
லியோ படத்திலிருந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நா ரெடிதான் ஃபர்ஸ்ட் சிங்கிளும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகின. அதனையடுத்து சஞ்சய் தத் பிறந்தநாளுக்கு அவர் ஏற்றிருக்கும் ஆண்டனி தாஸ் க்ளிம்ப்ஸ், அர்ஜுன் பிறந்தநாளுக்கு அவர் ஏற்றிக்கும் ஹெரோல்டு தாஸ் கதாபாத்திர க்ளிம்ப்ஸுகள் வெளியாகின. மேலும் கடந்த வாரம் லியோ படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.
இதை தொடர்ந்து போஸ்டர்கள் வெளியான சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. இந்த சூழலில் லியோ ஆடியோ ரிலீஸ் செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் என கூறப்பட்டது. மேலும் நேற்று மாலை அந்த அரங்கத்தில் மேடை அமைக்கும் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. அவைகளை பார்த்த ரசிகர்கள் இது லியோ படத்துக்கான பணிகள்தான் என்று அறுதியிட்டு கூறினர்.
இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாது என்று படத்தை தயாரித்திருக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பாஸ் கோரிக்கைகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமின்றி பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி படத்தின அப்டேட்டுகளை வெளியிடுவோம். அதேபோல் பலர் நினைப்பது போல் இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு எதுவுமோ காரணம் இல்லை” என குறிப்பிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி குட்டி கதை சொன்னார். அது விஜய்க்கு எதிராகத்தான் என்று கருதப்பட்டது. எனவே லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் குட்டி கதை சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லியோ தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவு விஜய் ரசிகர்களுக்கு சோக கதையாக அமைந்துவிட்டது என்று ரசிகர்களில் ஒரு தரப்பினர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.