நான் அமைச்சராக இருக்கும் காலப்பகுதியில் எந்தவொரு பாடசாலையையும் தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப் போவதில்லை என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும்
போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவவித்ததாவது நாட்டில் தற்போது 499
தேசிய பாடசாலைகள் உள்ளன. அதில் கல்வி கற்பிக்கும் ஆசியர்கள் 35ஆயிரம் பேர் உள்ளனர். அவ்வாறு தேசிய பாடசாலையில் கடமையாற்றும் 14500 பேர் இடமாற்றம் கோரியுள்ளனர்.
அவர்களுக்கு இடமாற்றம் வழங்கியவுடன் 20 முதல் 25 பேர் வரையிலானவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதியை நாடடியுள்ளனர். அதன் பின்னர் ஜனாதிபதியை சந்தித்து நான் அப்பிரச்சினைக்கு
தீர்வினை எட்டியுள்ளேன்.
அதேநேரம் 499தேசிய பாடசாலைகளில் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றிசிறப்பான வெளியீட்டைப் பெற
முடியாது விட்டால் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தியிருந்தால் நிலைமைகள் எவ்வாறிருக்கும். ஒரு இலட்சத்தை கடந்து ஆசிரியர்கள் கற்பித்தல் பணிக்காக தேவைப் படுவார்கள்.
அப்படியிருக்க, தற்போது அபிவிருத்தி உத்தியோகத் தர்களாக உள்ளீர்க்கப்பட்ட 22 ஆயிரம் பேர் எவ்விதமான பயிற்சிகளும் இல்லாது பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் பட்டதாரிகளாக இருக்கின்ற நேரம் தரம் ஒன்றில் உள்ள பிள்ளைக்கு கூட கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாதவர்களாக உள்ளனர்.
ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கலாசாலையில் கற்பித்தலுக்கான உளவளம் உட்பட 37 விடயங்கள்
கற்பிக்கப்படுகின்றன. அவ்விதமான பயிற்சி இல்லாதவர்களால் மாணவர்களின் மனோநிலைக்கு கீழிறங்கி
கற்பித்தல் செயற்பாட்டை வழங்க முடியுமா? இதற்கு யார் பொறுப்புக் கூறுவது.
அதேநேரம், சீனா இம் முறை சீருடை அளிக்காது விட்டிருந்தால் எமது உடைகள்தான் இறுதியில் கழன்றிருக்கும் – என்றார்