வேலைக்கு செல்லும் பெண்களில் அதிகளவானோர் புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் இஷானி பெர்னான்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
45 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட வேலைக்கு செல்லும் பெண்களுக்கே புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
வேலையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான பரிசோதனைகள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றமை இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதிவாகின்ற புற்றுநோயாளர்களில் 26 சதவீதமானோர் மார்பக புற்றுநோய்க்கே இலக்காகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 2020ம் ஆண்டு 2.2 மில்லியன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களில் 6,85,000 பேர் அந்த ஆண்டிலேயே உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் 2020ம் ஆண்டாகும் போது 37,648 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களில் 15,599 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் புற்றுநோயாளர்கள் அதிகரித்துள்ளமை குறித்து தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் இஷானி பெர்னான்டோ கருத்து வெளியிட்டார்.
“இலங்கையில் ஒரு லட்சம் பேரில் புதிதாக 27.3 பேருக்கு புற்றுநோய் உறுதிப்படுத்தப்படுகின்ற நிலையில், அவர்களில் சுமார் 11.4 வீதமானோர் உயிரிழக்கின்றனர். 2020ம் ஆண்டில் மாத்திரம் 5329 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதில் ஆண்களுக்கு மத்தியில் காணப்படும் மார்பக புற்றுநோய் 147 ஆகும். இலங்கையில் 1985ம் ஆண்டு ஒரு லட்சத்திற்கு 9.4ஆக காணப்பட்ட மார்பக புற்றுநோய், தற்போது ஒரு லட்சத்திற்கு 38.8 ஆக அதிகரித்துள்ளது. மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளது. முதலிலேயே அடையாளம் கண்டு, சிகிச்சை பெறுவதே சிறந்தது.” என அவர் குறிப்பிட்டார்.