பிரித்தானியாவின் ஒன்வெப் ( OneWeb’s) செயற்கைக்கோள் நிறுவனத்தின் எல்.வி.எம்-3 ரொக்கெட், 36 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவிலிருந்து ஒரே நேரத்தில் ஏவப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ரொக்கெட் இன்றைய தினம் (26.03.2023) ஏவப்பட்டதாகவும் இந்த முயற்சி இந்தியாவுக்கு ஒரு மைல்கல் என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
புவியின் தாழ் வட்டப்பாதையில் ஏவப்படும் (LEO) செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் நிறுவனமான ‘ஒன்வெப்’, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றும் இந்திய விண்வெளித்துறையின் வணிகப்பிரிவான ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ (என்.எஸ்.ஐஎல்) ஆகியவை இணைந்து வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களை ஏவுவது தொடர்பாக இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி, இஸ்ரோவின் அதிக எடைகொண்ட ரொக்கெட்டான எல்.வி.எம்.3 மூலம் ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்படும். முதலில் ‘ஜிஎஸ்எல்வி எம்.கே-3’ என்று இந்த ரொக்கெட்டுக்கு பெயர் இருந்த நிலையில், பின்னர் அது ‘எல்.வி.எம்-3’ என்று பெயர் மாற்றம் பெற்றது.
இந்நிலையில், 2ஆவது கட்டமாக இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ரொக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் இன்றைய தினம் காலை 9 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான கவுன்ட்-டவுன் நேற்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 5,805 கிலோ.
இவை அனைத்தும் பூமியிலிருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த செயற்கைக்கோள்கள் பகுதி பகுதியாக லொஞ்சரிலிருந்து பிரிந்து அதன் வட்டப் பாதையை அடைந்தன எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.