நாட்டின் பழைய அல்லது நவீன தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாட்டின் தற்போதைய கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தங்காலை கிளைச் சங்கத்தை ஸ்தாபிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,
“கலாச்சாரத்தை மதிக்கும் குழந்தையை சமுதாயத்திற்கு விட்டுச் செல்வது பெற்றோரின் பொறுப்பு.
சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் என எந்த கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு குழந்தைகளை உருவாக்க வேண்டும். அது பெற்றோர்களாகிய நமது கடமையும் பொறுப்பும் ஆகும்.
முஸ்லிம் பிள்ளை முஸ்லிம் கலாசாரத்திற்கு ஏற்ற உடை அணிவதற்கும், தமிழ் பிள்ளை வேட்டி அணிவதற்கும், சிங்கள பிள்ளை சேலை அணிவதற்கும் வெட்கப்படக்கூடாது.
கலாச்சாரம் மற்றும் மதத்தை மதிக்கும் சமூகத்தின் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான பலன்களை நாம் அடைய முடியும்.” எனத் தெரிவித்திருந்தார்.