யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஏழு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கல்வியங்காட்டுப் பகுதியில் மர விற்பனை நிலையமொன்றில் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று சனிக்கிழமை பொலிஸார் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு எந்தவிதமான பதிவுகளும் இல்லாததுடன், ஏனைய மூன்று மோட்டார் சைக்கிள்களுக்கும் போலியான பதிவுகள் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஏழு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றிய பொலிஸார், அவற்றை உடைமையில் வைத்திருந்த நபரையும் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் என்றும், நாட்டில் பல்வேறு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








