நீதிமன்றத்தை அவமதித்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துகளை வெளியிட்ட ஞானசார தேரரை விடுதலை செய்தால், நாட்டில் இனவாதம் மீண்டும் தலைதூக்கும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுவதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், நீதிமன்றத் தீர்ப்பில் அரசாங்கமும் நிறைவேற்றுத்துறையும் தலையிட்டு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருவது பொருத்தமற்றது எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஞானசார தேரரின் விடுதலை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபத்திற்காகவும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்திலும் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.








