தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரத்தில் பொதுமக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் அரசாங்கம் வெவ்வேறு விதமாகச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், அகிம்சை வழியில் போராடி உயிரிழந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தமிழர் பகுதிகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட போதிலும், சாட்சியங்கள் முன்னிலையாகாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மதிவதனி, சிலை அமைக்க அனுமதி கோரிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அர்ச்சுனா, சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் இந்த விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், நல்லூரில் திலீபனின் சிலையை நிறுவிய சம்பவம் தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சிலையை நிறுவுவதற்கான நிதியுதவி வழங்குதல், நிர்மாணித்தல், விளம்பரப்படுத்துதல் மற்றும் திறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களிடமே வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
திலீபன் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நல்லூரில் நிறுவப்பட்ட சிலையைப் பொலிஸார் கைப்பற்றி நீதிமன்றத்தில் வழக்குப் பொருளாகச் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த விவகாரத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








