சீரற்ற காலநிலை காரணமாக கண்டி ஹந்தானை மலைத்தொடரில் ஏறிய இளம் ஜோடி வழிதவறி தத்தளித்த நிலையில இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் ஜோடி நேற்று (22) மதியம் மலைக்கு ஏறிய நிலையில், மாலையில் பெய்த மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக வழியைக் கண்டறிய முடியாமல் வழிதவறிச் சிக்கிக் கொண்டுள்ளனர்.
நிலைமை அறிந்த அவர்கள் 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்திற்கு அது குறித்து அறிவித்ததைத் தொடர்ந்து, கண்டி பொலிஸாரால் இலங்கை இராணுவத்தின் இரண்டாவது சிங்க படைப்பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இராணுவ உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் சிப்பாய்கள் 06 பேரைக் கொண்ட குழுவொன்று அங்கு சென்று, இன்று (23) அதிகாலை 12.30 மணியளவில் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை நிறைவுசெய்து, இளம் ஜோடியை எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாகக் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.







