உண்ணாவிரதம் மேற்கொண்டு அண்மையில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான உதயகலா எனும் பெண்மணி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு, இன்றையதினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.\மேலும் அவர்கள்,
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அனைவரும் இறுதி யுத்தத்தில் இறந்து விட்டதாகவும், அவர்கள் அனைவரும் முன்னாள் போராளிகள் எனவும் அப்பட்டமான ஒரு பொய்யை உதயகலா கூறி இருக்கின்றார்.
வடக்கில் யுத்தம் நடந்த போது, அங்கு இருந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அல்ல, 75 வீதத்திற்கும் மேல் மக்களே இருந்தனர்.
அந்த பொதுமக்களில் பலர் இன்று காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் யுத்தத்தில் சரணடைந்தனர், அவர்களில் முக்கால்வாசி பேர் பொதுமக்களே.
சரணடைந்த மற்றும் இராணுவத்தால் இழுத்து செல்லப்பட்ட எமது பிள்ளைகள், எமது மக்கள், எமது பெண்கள் எங்கே எனக் கேட்டு நிற்கிறோம்.
எங்களது உறவுகளை தொலைத்து நிற்கின்ற வலியை பற்றி இந்த உதயகலாவிற்கு என்ன தெரியும்.
தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டதையும், அழிக்கப்பட்டதையும் சர்வதேசமே இன்று கூறுகிறது, ஜெனிவாவில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உதயகலாவின் கருத்துக்களுக்கு அனைத்து மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
அவர் தெரிவித்த அப்பட்டமான பொய்களுக்கு உடனடியாக அனைத்து மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.” இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.