தென்னிலங்கைக்கு சிம்மசொப்பனமாக ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் ஆயுதங்களை கைவிட்டதற்காக இன்று கவலைப்படுகின்றோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் அவர்களின் 60வது பிறந்த தினமான மணி விழாவினை முன்னிட்டு ஜனாவின் வாக்குமூலம் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று(01.10.2023) மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ”எங்கும் புத்தபிக்குகளின் நாட்டாமைத்தனத்தையும், இராணுவமும், முப்படையும் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் அடாவடித்தனத்தையும் மாற்றவேண்டுமானால் மீண்டும் ஆயுதப்போராட்டத்தினை ஆரம்பித்தால் என்ன?” என்ற விருப்பம் ஏற்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேவாநாயகம் மண்டபத்தில் இந்த நிகழ்வு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு “ஜனாவின் வாக்குமூலம்’நூல் வழங்கப்பட்டு நூல் வெளியீடு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் அவரது துணைவியார் இணைந்து இந்த நூல் வெளியீட்டை ஆரம்பித்துவைத்தனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகசபை,சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.