வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் போலி செய்தியை வளிமண்டலவியல் திணைக்களம் மறுத்துள்ளதுடன், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எந்தவொரு அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுகப்படவில்லை.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், அத்துடன் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (30) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரவும் போலி செய்தி பின்வருமாறு,
உயர் மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது… ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே 12 ஆம் திகதி வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, எவரும் வெளியில் (திறந்தவெளியில்) செல்லக்கூடாது,

ஏனெனில் வளிமண்டலவியல் திணைக்களம் 45°C முதல் 55°C வரை வெப்பநிலை அதிகரிக்கும் என அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவருக்காவது சுவாசிப்பதில் சிரமம் அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டால், அவர்கள் உடனடியாக வைத்தியர் ஒருவரை அணுக வேண்டும்.
மேலும், சிவில் பாதுகாப்பு திணைக்களம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த போலிச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த செய்தி தொடர்பில் மக்களை அச்சமடைய வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.