செயற்கை சுனாமியை உருவாக்கக்கூடிய ஆயுதத்தை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.
வட கொரியா, தென்கொரியா இடையே நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அண்மையில் இரு நாடுகளும் கூட்டுப் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே வடகொரியா கடலுக்கு அடியில் புதிய அணு ஆயுதத்தை சோதித்துள்ளது. நாட்டின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.
மேலும், “கடலுக்கு அடியில் செலுத்தப்பட்ட ஆயுதம் 80 முதல் 150 மீற்றர் ஆழத்தில் சுமார் 60 மணி நேரம் பயணம் செய்து பின்னர் வெடித்து சிதறியது. இதன் மூலம் செயற்கை சுனாமியை ஏற்படுத்தினோம். தலைவர் கிம் ஜோங் உன்னின் மேற்பார்வையில் இந்த சோதனை நடந்தது”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. வடகொரியாவின் இந்த சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.