பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்த பிரமிப்பான விஷயங்கள் எல்லாம் இப்போது நிஜ வாழ்க்கையில் நடந்து வருகிறது. டிரான்ஸ்பார்மர்ஸ் (Transformers) மற்றும் அவதார் (Avatar) போன்ற திரைப்படங்களில் நாம் பார்த்த வியத்தகு ராட்சஸ ரோபோட்கள் இப்போது நிஜ வாழ்க்கையில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு கிடைத்துவிட்டன.
ஆம், மனிதர்களின் பயன்பாட்டிற்கு இப்போது ராட்சஸ ரோபோட்கள் கிடைக்கின்றன. டிரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற திரைப்படங்கள் அல்லது டைட்டான்ஃபால் போன்ற கேம்களில் நாம் பார்த்த ராட்சத ரோபோக்கள் இப்போது விற்பனைக்கு தயார் ஆகிவிட்டது. செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மற்றும் ரோபோ (Robot) தொழில்நுட்பங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் வேகமாக முன்னேறி வருகின்றன.
இப்போது, ஜப்பானை (Japan) தளமாக கொண்ட ட்சுபாமே இண்டஸ்ட்ரீஸ் (Tsubame Industries) என்ற ஒரு ஆரம்ப நிலை நிறுவனம், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்தி, 4.5-மீட்டர் உயரமுள்ள ஒரு ராட்சஸ ரோபோவை (Giant robot) உருவாகியுள்ளது. இதன் உயரம் சுமார் 14.8 அடியாகும். இதில் நான்கு சக்கரங்கள் உள்ளன. இதை ஒரு மனிதன் உள்ளே இருந்து இயக்க கூடிய இடமும் வழங்கப்பட்டுள்ளது. இதை நிறுவனம் ARCHAX என்று அழைக்கிறது. இதை இந்த நிறுவனம் 3 மில்லியன் டாலர் விலையில் உருவாக்கியுள்ளது. இன்றைய உலகில், உங்களிடம் போதுமான பணம் இருந்தால், நீங்கள் கிட்டத்தட்ட எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலையே நிகழ்கிறது. இதை ட்சுபாமே நிறுவனம் மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ARCHAX என்ற பெயரிடப்பட்ட “டிரான்ஸ்ஃபார்மர்ஸ்” ரோபோவை இப்போது யார் வேண்டுமானாலும் வாங்கலாம்.
இந்த ரோபோவின் வெளிப்புறத்தில் நிலைநிறுத்தப்பட்ட கேமராக்களிலிருந்து படங்களைக் காண்பிக்கும் மானிட்டர்களுடன் கூடிய காக்பிட்டை (cockpit area with monitors and camera) ARCHAX கொண்டுள்ளது. காக்பிட் என்பது விமானத்தில் பைலட்கள் ஒட்டுமொத்த விமானத்தை கட்டுப்படுத்தி, இயக்கும் இடமாகும். அதேபோன்ற ஒரு கட்டுப்பாட்டு இடத்தை இந்த ஆர்சாக்ஸ் (ARCHAX) ரோபோட் கொண்டுள்ளது.
இந்த காக்பிட்டிற்குள் ஒரு நபர் பாதுகாப்பாக உட்கார்ந்து, இந்த ஒட்டுமொத்த ரோபோவின் இயக்கத்தையும் இயக்கலாம். அவதார் திரைப்படத்தில் சண்டையிடும் ரோபோட் போல, நீங்கள் இந்த ரோபோவை உள்ளிருந்து இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோபோவின் கைகளையும், கால்களையும் கட்டுப்படுத்த காட்பிட் ஏரியாவில் ஜாய்ஸ்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரோபோவின் செயல்பாடுகளை உங்களால் இயக்க முடியும்.
ARCHAX இரண்டு மோட்களில் இயங்குகிறது. இதில் “ரோபோ பயன்முறை” மற்றும் “வாகனப் பயன்முறை” என்று 2 மோட்களை ரோபோ ஆதரிக்கிறது. வாகன முறையில், இந்த ரோபோ மணிக்கு 10 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். ARCHAX தற்போது $3 மில்லியனுக்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் இப்போது வரை ஐந்து இயந்திரங்களை உருவாக்கி விற்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும், Tsubame Industries இன் CEO, ரியோ யோஷிடா (Ryo Yoshida) கூறுகையில், இந்த ரோபோவை விண்வெளி துறையில் பயன்படுத்த முடியும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இத்தகைய ரோபோக்களை மனிதர்கள் எதற்காக பயன்படுத்துவார்கள் என்று இப்போதே நம்மால் ஊகிக்க முடியவில்லை.
இருப்பினும், இதன் வளர்ச்சி, மனிதனால் இயக்கப்படும் ரோபோக்கள் மிகவும் சாத்தியமானதாக மாறிவருகிறது என்பதை குறிக்கிறது. இவை வரவிருக்கும் ஆண்டுகளில் சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நிரூபித்துள்ளது. இப்போதைக்கு விலை உயர்ந்த பொம்மை போல் தோன்றினாலும், எதிர்காலத்தில் விரைவில் இவை உண்மையிலேயே சூப்பர் ஹீரோ சாதனைகளை நிகழ்த்த வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.