மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கபட்டது. இன்று (04.10.2023) காலை களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் தமது முச்சக்கர வண்டிகளை நிறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு பிரதேச சபையின் வாயிற் கதவை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரதேசத்திலேயே இருந்து கொண்டு பிரதேச சபைக்கு வரியைச் செலுத்திக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் தமக்கு வெளி பிரதேசங்களிலிருந்து வரும் முச்சக்கர வண்டிகளால் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் உடன் கவனத்தில் எடுக்க வேண்டும், எமக்குரிய தீர்வை பெற்றுத்தா, மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் உங்கள் கவனத்திற்கு, கிழக்கு மகாண ஆளுநரின் கவனத்திற்கு, உள்ளிட்ட வாசகங்களை எழுத்தியிருந்த பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்ட காரர்களில் 4 பேரை பிரதேச சபையின் செயலாளர் சா.அறிவழகன் அவரது காரியாலயத்தினுள் அழைத்ததோடு, கடமையிலிருந்த களுவாஞ்சிகுடி காவல் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரமவையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன்போது அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் ரெக்ஸ் வோட் பொருத்துதல், ஒற்றை நாட்கள். இரட்டை நாட்கள் என மாறி மாறி முச்சக்கர வண்டிகளை உரிய இடங்களில் தரித்து நிற்கச் செய்தல், பிரதேச சபையினால் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்ரிக்கர்களை ஒட்டுதல், மாதம் ஒருமுறை காவல்துறையுடன் முச்சக்கர வண்டி சாரதிகள் சந்திப்பை ஏற்படுத்தல், இதனை காவல்துறை, பிரதேச சபையயும், முச்சக்கர வண்டி சாரதிகளும் இணைந்து மேற்கொள்ளுதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.