உள்ளக பொறிமுறையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறானது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்த மனித சங்கிலி போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் பல நீதிபதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் காணப்பட்ட போதும் நீதிபதி ரி. சரவணராஜா அவர்களே அதை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசியல் தலையீடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினுடைய நேரடி அச்சறுத்தல் காரணமாக நீதித்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய கடமையை செய்வதை தடுத்து அவரை அச்சுறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய இனம் சார்ந்து ஒற்றுமையாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நாடும், அரசாங்கமும் எங்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு நீதி துறையை சுயமாக இயங்க அனுமதிக்க வேண்டும் . அதை சர்வதேசம் உறுதிபடுத்த வேண்டும் என்ற மக்களின் உணர்வுகளை இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் பல நீதிபதிகளுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தாலுமே அவை வெளிப்படையாக இருந்ததில்லை என்றும் அச்சுறுத்தலுக்கு மேலாக மன அழுத்தம் உருவாகி ஒரு நீதிபதி நாட்டை விட்டு வெளியேறுகின்ற சூழ்நிலை இதற்கு முன்னர் காணப்பட்ட போதும் தற்போது ரி. சரவணராஜா அவர்களே அதை வெளிப்படையாக செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
” ஏற்கனவே உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இப்பொழுது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளக பொறிமுறையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறானதோடு அது சாத்தியமற்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.