மட்டக்களப்பு,சித்தாண்டி பகுதியில் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் கடந்த 22 தினங்களாக தங்களது நில மீட்பு கோரிய அறவழிப் போராட்டம் பல்வேறுபட்ட வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம்(6) சித்தாண்டி சித்திரவேலாயுத முருகன் ஆலய முன்றலில் சிதர் தேங்காய் உடைத்து பேரணியாக வந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
22 தினங்களாக பண்ணையாளர்கள் வீதி ஓரமாக தங்களது நிலத்தை மீட்க கோரி போராட்டம் நடத்துகின்ற போதிலும் இன்றைய தினம் மாதவனை, மயிலத்தமடு பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் 50க்கும் மேற்பட்ட பௌத்தப்பிக்குகளும் 400க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இன அத்துமீறிய குடியேற்றவாசிகளும் அங்கு காணப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர்களது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் பண்ணையாளர்களுக்காக போராட்டம் நடத்திய போதும் பல வாக்குறுதிகளை வழங்கிய மட்டக்களப்பு இராஜாங்க அமைச்சர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து நின்றது பண்ணையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய தினம் (7) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரவுள்ள அதிபர் தங்களுக்கான நிரந்தர தீர்வு ஒன்றை வழங்காத பட்சத்தில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் எச்சரித்துள்ளனர்.