மலேசியாவின் வெளிவிவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டிராஜா டாக்டர் ஜாம்ப்ரி அப்ட் காதிர் நாளைய தினம் (08) இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை முதல் (08) அடுத்த வாரம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையான நான்கு நாட்களும் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, மலேசிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சரான அலி சப்ரியைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடல்களை நிகழ்த்தவுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் துணைச் செயலாளர் டத்தோ சையத் முகமட் பக்ரி சையத் அப்துல் ரஹ்மான், பிராந்திய ஒத்துழைப்புப் பிரிவின் துணைச் செயலாளர் அஹ்மட் கம்ரிசாமில் முகமட் ரிசா மற்றும் வெளியுறவுத் துறையின் சிறப்பு அதிகாரி ஆகியோர் மலேசியாவின் வெளியுறவு அமைச்சருடன் இணைந்து இலங்கைக்கு பயணமாகவுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் அமைச்சர் அப்தில்பர் அப் ரஷித் தெரிவித்தார்.
இவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 9 -10 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள IORA மூத்த அதிகாரிகள் குழுவின் 25வது கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள 23வது IORA அமைச்சர்கள் குழுவிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.