2025ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெறும் பரீட்சைகளை திட்டமிட்ட நேரத்திற்குள் நடாத்தும் வகையில் சட்டத்தை வகுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு ரணில் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
திட்டமிட்ட வகையில் இந்த வருடம் பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் 2024 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளை அதே வருடத்தில் நடத்த வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு சுமை ஏற்படாத வகையில் பரீட்சைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துவதற்கு நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாத வகையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியுள்ளார்.
பரீட்சைகள் பிற்போடப்படுவதனால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குள் செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்நோக்கி வருவதாக, கல்வி சார் புத்திஜீவிகள், ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்து தெளிவூட்டியிருந்த பின்னணியிலேயே இந்த பணிப்புரையை அவர் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.