மட்டக்களப்பு சீலாமுனை பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் டிக் டொக் காணொளி எடுப்பதற்காக ஆற்றில் பயணித்துள்ளனர். அதில் இருவர் நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (08.10.2023) மட்டக்களப்பு சீலாமுனை பகுதியிலுள்ள ஆற்றில் பயணித்து அதனை டிக் டொக் காணொளியாக செய்வதற்காக தோணியை எடுத்துக்கொண்டு அதில் 6 பேரும் பயணித்துள்ளனர். தோணியில் ஒருபகுதி உடைந்து தோணி ஆற்றில் மூழ்கியே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தோணி ஆற்றில் மூழ்கிய நிலையில் 6 பேரும் கரைக்கு வர முயற்சித்துள்ளனர். இவர்களில் 5 பேர் கரையை வந்தடைந்ததாகவும் பிரிஜன் என்பவர் ஆற்றில் மூழ்கி கொண்டிருந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற கிரி என்னும் இளைஞனும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்திலிருந்த மக்கள் கருத்து தெரிவித்தனர். மீட்கப்பட்ட பிரிஜன், கிரியின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் மட்/ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் பழையமாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.